மெட்ரோ ரயில் வேலை நிறுத்த போராட்டம்

02.05.2019
மெட்ரோ ரயில் வேலை நிறுத்தம் திரும்பப் பெறப்பட்டது!
முழு இயல்பு நிலை திரும்ப நிர்வாகம் முன்வரவேண்டும்!
★*★*★*★*★*★*★
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் தொழிற்சங்க காரணங்களுக்காக வேலை நீக்கம் செய்யப்பட்ட 7 சங்க நிர்வாகிகளை மீண்டும் வேலைக்கு எடுக்க வேண்டும் எனக்கோரி 29.04.2019 மாலையிலிருந்து வேலை நிறுத்தம் நடந்தது. ஒட்டுமொத்த நிரந்தரத் தொழிலாளர்களும் வேலை நிறுத்தத்தில் பங்கு பெற்றனர்.
இதையொட்டி உதவி தொழிலாளர் ஆணையர் அவர்கள் சமரசப் பேச்சுவார்த்தைக்கு 30.04.2019 அன்று அழைத்தார். பழிவாங்கும் நோக்கோடும், சட்ட விரோதமானதாகவும் செய்யப்பட்ட வேலை நீக்கத்தைத் திரும்பப் பெற வேண்டும் என தொழிற்சங்கங்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டது. இறுதியில் வேலை நீக்கம் செய்யப்பட்ட 7 தொழிலாளர்கள் மேல் முறையீடு செய்தால் சாதகமாக முடிவெடுக்கப்படும் என்று நிர்வாகம் ஒத்துக்கொண்ட அடிப்படையிலும், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதற்காக யார்மீதும் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்ற அறிவுரையை நிர்வாகம் ஏற்றுக்கொண்ட அடிப்படையிலும் வேலை நிறுத்தம் விலக்கிக் கொள்ளப்பட்டு 02.05.2019 அன்று காலை தொழிலாளர்கள் பணிக்குத் திரும்பிவிட்டனர்.
பணிக்குத் திரும்பிய தொழிலாளர்களுக்கு அவரவர் பணி செய்த இடத்தில் வேலை வழங்காமல் தனியாக உட்காரவைத்து வருகைப் பதிவிற்கு தனித்தாளில் நிர்வாகம் கையொப்பம் பெற்றுள்ளது. இது தொழிலாளர் உதவி ஆணையாளர் முன்பு இருதரப்பும் ஏற்றுக்கொண்ட அறிவுரைக்கு முற்றிலும் எதிரானது. இது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதற்காக பழிவாங்கவும், மனஉளைச்சலை உண்டாக்கவும் செய்யப்படுகிற நடவடிக்கையாகும். நிர்வாகம் உடனடியாக அனைவருக்கும் அவரவர் இடத்தில் வேலை வழங்கி இயல்புநிலை முழுமையாக திரும்பச் செய்ய வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
ஏதோ நாச வேலையில் ஈடுபட்டதாக பொய்க் குற்றம் சுமத்தி மூன்று தொழிலாளர்களின் பெயர்களை ஊடகங்களில் நிர்வாகம் அறிவித்து பிரச்சாரம் செய்கிறது. குற்றம் நிருபணம் ஆவதற்கு முன்பே நிர்வாகம் செய்துள்ள இந்த வேலை தொழிற் சங்கத்தையும் தொழிலாளர்களையும் மக்களிடம் மோசமாக சித்தரிப்பதற்காகவே செய்யப்படுகிறது. வேலை நிறுத்தத்தால் சர்வீஸ் பாதிக்கப்படவில்லை என்ற தோற்றம் கொடுப்பதற்காக நாச வேலை என்ற சதிவலையை நிர்வாகம் பின்னுகிறது. இது வன்மையான கண்டனத்திற்குரியது. தொழிலாளர்களின் பெயர்களை ஊடகங்களுக்கு வழங்கிய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நிர்வாகத்தின் ஒவ்வொரு நடவடிக்கையும் சட்டவிரோதமாகவே உள்ளது. நிர்வாகம் தானே ஒரு விதிகளை உருவாக்கி வைத்துக்கொண்டு எந்த சட்டத்திற்கும் உட்படாமல் தனித்தீவு போல் செயல்படுகிறது. இது ஒருவகையில் கங்காரு கோர்ட் போன்றதுதான். மாதிரி நிலையானைகள் சட்டத்தையே அவர்கள் பின்பற்றவில்லை என்பதிலிருந்து நிலைமையின் மோசமான தீவிரத்தன்மையைப் புரிந்துகொள்ளலாம்.
நிரந்தரத் தன்மையுள்ள ஓட்டுநர், டிராபிக் கன்ட்ரோலர், டெக்னிசியன் போன்ற வேலைகளில் ஒப்பந்த ஊழியர்களை ஈடுபடுத்தக்கூடாது என்பது கான்ட்ராக்ட் ஒழுங்குபடுத்தல் சட்டத்தின் முக்கியமான விதி. இந்த விதியை மீறி ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரத் தன்மையுள்ள வேலைகளில் ஈடுபடுத்துகின்றனர்.
ஊதிய உயர்வு விகிதத்தைக் குறைப்பது அலவன்சுகளை முற்றிலுமாக நீக்குவது, இதுவரை இருக்கிற விதிகளை ரத்து செய்வது போன்ற அடுக்கடுக்கான குற்றங்களை நிர்வாகம் புரிந்து வருகிறது. பொது மக்கள் காணுகிற மினுமினுப்பிற்கும் உள்ளே நடப்பதற்கும் சம்பந்தமே இல்லாமல் இருக்கிறது.
எனினும் வேலைக்குத் தொழிலாளர்கள் திரும்பி விட்டனர். எப்போதும் போல் கடினமாய் உழைப்பை கொடுப்பார்கள். முழு இயல்புநிலை நிரும்புவது இப்போது நிர்வாகத்தின் கையில்தான் உள்ளது.
எல்லாவற்றையும் இழந்து நிற்கிற தொழிலாளர்களுக்கு பொதுமக்கள் ஆதரவுக் கரம் தர வேண்டுமென கோருகிறேன்.

admin

Related Posts
Leave a reply